இளையராஜா பிறந்த நாள்: அமெரிக்காவில் மரக்கன்றுகள் நட்ட தமிழர்!


avatar

ஹூஸ்டன்(யு.எஸ்): இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி தமிழகம் எங்கும் ஒரு லட்சத்திற்கும் மேலாக மரங்கள் நட்டப்பட்டன.

அதே ஜூன் 2ம் தேதி அமெரிக்காவில் உள்ள இளையராஜாவின் தீவிர ரசிகர் ஒருவர் நான்கு மரங்களை அமெரிக்க மண்ணில் நட்டு தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒட்டன்சத்திரத்தை சார்ந்த அருண்குமார் அமெரிக்காவில் கம்ப்யூட்டர் துறையில் பணியாற்றி வருகிறார்., தான் வேலை பார்க்கும் அமெரிக்க நிறுவனத்தின், மேலாளர்களிடம் இளையராஜாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் பற்றி தெரிவித்து, தானும் மர நட விரும்புவதாக கூறியுள்ளார். அவருடன் பணியாற்றும் அமெரிக்க ஊழியர்களுக்கு ஏற்கனவே இளையராஜாவின் இசையை அறிமுக செய்து வைத்திருக்கிறார். பல நேரங்களில் இளையராஜா இசை குறித்து கலந்துரையாடல்களும் செய்துள்ளனர். அந்த அமெரிக்க ஊழியர்களும் மரம் நடும் நிகழ்வுக்கு உறுதுணையக இருந்து அனுமதி பெற ஒத்துழைத்துள்ளனர்.

இளையராஜாவின் விருப்பத்திற்கேற்ப தமிழகத்தில் அரசு, வேம்பு, புளி மரங்கள் நடப்பட்டன. அதையே பின்பற்ற நினைத்த அருண்குமார் அரச மர சாயலில் இருக்கும் அமெரிக்க மரத்தின் கன்றுகளை எடுத்து வந்து நட்டார். பார்ப்பதற்கு அச்சு அசலாக அரச மரம் போலவே இருக்கும் இந்த அமெரிக்க அரச மரம், அங்குள்ள கோவில்களிலும் இடம்பெற்றுள்ளது. அதைப் பார்த்த பிறகே இந்த மரத்தைத் தேர்தெடுத்துள்ளார்.

ஏதோ பெயருக்கு நட்டோம் என்றில்லாமல், அலுவலக வளாகத்தில் பராமரித்து வளர்க்கப்படும் சூழலில் மரங்களை நட்ட அருண்குமாரிடம், எதற்காக இவ்வளவு சிரத்தை எடுத்து செய்துள்ளீர்கள் என்று கேட்ட போது ‘இயற்கையை பாதுகாப்பதற்காகத் தான் ராஜா சார் மரம் நடச் சொன்னார். நான் தமிழகத்தில் இருந்திருந்தால், எங்கள் ஊர்ப் பகுதியில் ஏராளமாக நட்டிருப்பேன். அமெரிக்காவிலும் மரங்கள் தேவைதானே. நம் இசை ராஜா உலகத்திற்கே சொந்தக்காரர்தானே! ஆகையால் அமெரிக்காவிலும் மரம் நடலாம் என்று தோன்றியது. ராஜா சாரின் பெயரில் அமெரிக்காவில் நான்கு மரங்கள் வளர்ந்து வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது,' என்றார்.

மேலும் அவர் கூறுகையில், 'வார்த்தைகள் இல்லாமல் இசையில் மட்டுமே உணர்வுகளை புரிய வைக்கும் வல்லமை ராஜாவின் இசைக்கு உண்டு. தொடக்க இசை, இடை இசை, பின்ணணி இசை என அனைத்திலும் ஒவ்வொரு வித உணர்வுகள் இருக்கும். ஒற்றைக் கருவியை வைத்தோ அல்லது இசைக்கருவிகளே இல்லாமலோ பாடலுக்கு இசையமைக்கக் கூடிய அவர் நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்களை இயக்கி இசையமைக்கும் பிதாமகன்.

நம் மண்ணின் மணம் வீசும் அத்தனை விதமான இசைகளையும் இசைஞானியின் பாடல்களில் மட்டுமே பார்க்கமுடியும். தவிர, உலக இசையை அவர் எப்போதோ தமிழுக்கு கொண்டு வந்து விட்டார். வளைகுடா, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு செல்லும் எனக்கு, அங்குள்ள உள்ளூர் இசையைக் கேட்கும் ஆர்வம் உண்டு. அப்படிக் கேட்கும்போது அது ஏற்கனவே அறிமுகமான இசையாக இருக்கும். கூடவே அதற்குரிய தமிழ்ப் பாடலும் நினைவுக்கு வரும்.

சமீபத்தில் வெளியான ஒரு இஸ்ரேலிய பாடலைக் கேட்ட போது 'ஏஞ்சோடி மஞ்சக்குருவி..' (விக்ரம்) பாடலில் அத்தகைய இசையை கையாண்டுள்ளதை உணர்ந்தேன். சிறுவயது முதலே கேட்டு வரும் இசைஞானியின் இசைதான் எனக்கு உலகம் முழுவதும் துணையாக வருகிறது," என்றார் பரவசத்துடன்! இளையராஜா பெயரில் நான்கு மரங்கள் அமெரிக்காவில் வளர்ந்து வருவது அந்த மண்ணிற்கே பெருமைதான்!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!