உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஆதாரம் இளையராஜா இசை!- எஸ் ராமகிருஷ்ணன்


avatar

சென்னை: உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஆதாரமே அய்யா இளையராஜா இசைதான் என்றார் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்.

இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் விழா சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இன்று கோலாகலமாக நடந்தது. தயாரிப்பாளர் - இயக்குனர் பஞ்சு அருணாச்சலம், இயக்குநர்கள் பாலா, பார்த்திபன், சுகா, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இந்த விழாவில் இளையராஜா குமுதத்தில் தொடராக வந்த இளையராஜாவின் கேள்வி பதில்களின் தொகுப்பான ‘இளையராஜாவைக் கேளுங்கள்' எனும் புத்தகமும், திருப்பாவை பள்ளி எழுச்சிப் பாடல்களும் வெளியிடப்பட்டன.

இந்த விழா இளையராஜாவின் பிறந்தநாளாக மட்டுமல்லாமல். 71001 மரக் கன்றுகள் நடும் விழாவாகவும் நடைபெற்றது.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசுகையில், "நான் ஒருமுறை வெளிநாடு சென்று கொண்டிருந்தேன். அப்போது ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் நின்ற விமானம் திரும்பக் கிளம்ப எட்டுமணி நேரமாகும் என்பதால் இளையராஜாவின் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அதே ஏர்போர்ட்டில் சதீஷ் என்கிற இளைஞனும், இளையராஜாவின் காதலின் தீபம் ஒன்று... பாடலை செல்போனில் ஒலிக்கவிட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான். உடனே நான் அவனிடம் ஓடிச்சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். என்னிடமுள்ள இளையராஜா பாடல்களை அவனும், அவனிடமுள்ள இளையராஜாவின் பாடல்களை நானும் பகிர்ந்து கொண்டோம். நாங்கள் இருவரும் அங்கே எங்களை மறந்து, போட்டிபோட்டுக்கொண்டு இளையராஜாவின் பாடல்களைக் கேட்க, அவற்றைக் கேட்டு 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரும் அந்தப் பாடல்களை ரசித்து, பாராட்டிவிட்டுச் சென்றனர்.

நான் வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம், நான் தங்கும் விடுதியின் கதவைத் திறந்துவைத்துவிட்டு, இளையராஜாவின் பாடல்களை ஒலிக்க விடுவேன். நிச்சயம் அடுத்த சில நிமிடங்களில் யாராவது ஒருவர் என் அறையைத் தேடி வந்து நீங்க தமிழா என்று கேட்டு வருவார்கள்.

எந்த ஊருக்கும், எந்த நாட்டுக்கும் சென்றாலும் அங்கே இளையராஜா பாடல்களைக் கேட்கும் தமிழன் ஒருவனை சந்திக்காமல் இருக்கவே முடியாது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் முதல் ஆதாரமே இசைஞானியின் இசைதான்," என்றார்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!